Modi in US: `இந்திய குடியேறிகள்; தீவிரவாதம், அணுசக்தி' - மோடி, ட்ரம்ப் பேசியது என்ன?!
அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக வசிக்கும் யாவரையும் இந்தியா திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்றும், ஆள்கடத்தலுக்கு முடிவு கட்டப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
அமெரிக்காவில் குடியேறிகள் திருப்பி அனுப்பப்படுவது பற்றி பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எந்த நாட்டிலும் யாரும் சட்டத்துக்குப் புறம்பாக நுழைந்தால், அங்கு வசிக்க உரிமை கிடையாது எனக் கூறியுள்ளார் மோடி.
முன்னதாக அமெரிக்காவிலிருந்து 104 இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக, பெரும் விவாதங்கள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து பேசிய மோடி, "இந்தியாவின் இளம் அப்பாவி ஏழை மக்கள் இடம்பெயர்வுக்கு இழுக்கப்படுகின்றனர். இவர்கள் மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள். இவர்களை பெரிய கனவுகளையும் சத்தியங்களையும் செய்து கவருகின்றனர். பலர் ஆள்கடத்தல் அமைப்புகள் மூலம் கொண்டுவரப்பட்டனர்." எனக் கூறியுள்ளார்.
மேலும், ``இந்த மொத்த ஆள் கடத்தல் அமைப்புடனும் மிகப் பெரிய சண்டையிட வேண்டியிருக்கிறது. அதிபர் ட்ரம்ப் இந்த அமைப்புகளை முறியடிக்க இந்தியாவுக்கு ஒத்துழைப்பார் என முழுமையாக நம்புகிறோம்." என்றும் தெரிவித்துள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/za8inyjl/WhatsApp_Image_2025_02_15_at_09_48_48_5ed8ee62.jpg)
'உலகிலேயே தீய மனிதன்'
மறுபுறம் ட்ரம்ப் 2008 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடுகடத்துவதாக அறிவித்தார். தஹாவ்வூர் ராணா என்ற அந்த நபரை 'உலகிலேயே தீய நபர்' என்று அழைத்தார்.
இது குறித்து மோடி, "இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடி வருகின்றன. எல்லைகளுக்கு அப்பால் உருவாகும் தீவிரவாதத்தை அழிக்க வலிமையான நடவடிக்கைகள் வேண்டும். 2008ம் ஆண்டு இனப்படுகொலை நடத்திய குற்றவாளியை அமெரிக்கா இந்தியாவிற்கு அனுப்பவதற்காக நான் அதிபருக்கு நன்றி கூறுகிறேன். இந்திய நீதிமன்றங்கள் முறையான நடவடிக்கை மேற்கொள்ளும்." எனத் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி சட்டங்களில் மாற்றம்?
ட்ரம்ப் பேசியபோது, "நானும் பிரதமரும் (மோடி) முக்கியமான ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்தியாவுக்கு அமெரிக்காதான் முன்னணி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வழங்கும் நாடாக இருக்கும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/npk4vpe4/WhatsApp_Image_2025_02_15_at_09_48_48_15028185.jpg)
அமெரிக்க அணுசக்தி துறையின் மிகப் பெரிய வளர்ச்சியாக, இந்தியா அமெரிக்காவின் அணுசக்தி தொழில்நுட்பத்தை வரவேற்கும் விதமாக சட்டங்களைத் திருத்துகிறது." எனக் கூறியுள்ளார்.
மேலும், "நமது ஒட்டுமொத்த வரலாற்றிலும் உள்ளதை விட மிகச்சிறந்த வணிக சாலையை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளோம். இது இந்தியாவிலிருந்து இஸ்ரேல், இத்தாலியை அடையும். அமெரிக்காவின் கூட்டாளிகளை சாலை, ரயில் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்களுடன் இணைக்கும். இது மிகப் பெரிய வளர்ச்சி" என்று கூறியுள்ளார்.