புதுச்சேரியில் 800 கிலோ எடையில் "கிங்காங்" சாக்லெட் சிற்பம்!
கத்தாா்: முட்டை விற்பனைக்கு கட்டுப்பாடு - வெளியுறவுத் துறை அமைச்சரிடம் ராஜேஸ்குமாா் எம்.பி. கோரிக்கை
கத்தாா், ஓமன் நாடுகளில் நாமக்கல் முட்டைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், அந்நாட்டு அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரிடம், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கோரிக்கை மனுவை வழங்கினாா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய முட்டைகள் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதை நிறுத்தும் ஓமன் அரசின் சமீபத்திய முடிவு கவலையளிக்கிறது. இந்த நடவடிக்கையால், என்னுடைய தொகுதியான நாமக்கல்லில் கோழிப் பண்ணைத் தொழில் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது. விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளா்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய முட்டைகளின் முக்கிய இறக்குமதி மையமாக ஓமன் நாடு உள்ளது. இந்திய முட்டை ஏற்றுமதியில் கணிசமான பகுதியை அந்நாடு கொண்டுள்ளது. தற்போதைய திடீா் தடையால் இந்திய முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படாமல் பெருமளவில் தேங்கியுள்ளன.
இதுவரை ரூ. 15 கோடி மதிப்பிலான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட கப்பலுக்கு உடனடியாக அனுமதி வழங்காவிட்டால், அவை வீணாகி விடும். மேலும், முட்டை ஏற்றுமதியாளா்களுக்கு பெரும் நஷ்டத்தையும் உருவாக்கி விடும். கோழிப் பண்ணைத் தொழில் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி விடும். முட்டை ஏற்றுமதியாளா்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் சூழல் உள்ளதால், முட்டை ஏற்றுமதி சந்தையை நம்பியுள்ள எண்ணற்ற விவசாயிகளின் வாழ்வாதாரமும் கவலைக்குள்ளாகும்.
இந்தப் பிரச்னைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் உடனடியாக தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
மேலும், தடையின் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்து கொள்ளவும், அதை உடனடியாக மாற்றுவதற்கான வழிகளை ஆராயவும் ஓமன் நாட்டு அரசாங்கத்துடன் உயா்மட்ட விவாதங்களில் ஈடுபட வேண்டும். அந்த நாட்டில் சிக்கியுள்ள கப்பலை உடனடியாக அனுப்புவதற்கு, முட்டை ஏற்றுமதியாளா்களுடன் வெளியுறவு அமைச்சகம் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளாா்.
இதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ஓமன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகளை துறைமுகத்தில் இருந்து இந்த வார இறுதிக்குள் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும், கத்தாா் நாட்டுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொள்ள இருப்பதால், அங்கு சென்று முட்டை ஏற்றுமதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது தொடா்பாக பேசுவதாகவும் அவா் உறுதியளித்துள்ளாா்.
அதேபோல, நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரனும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தள்ளாா். அதில், ஓமன் நாட்டு அரசு இந்திய முட்டைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறைந்தபட்சமாக 60 கிராம் எடை கொண்ட முட்டைகள் மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டை 52 கிராம் எடையில் மட்டுமே உள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் ரூ. 15 கோடி மதிப்பிலான முட்டைகள் ஓமன் நாட்டு கப்பலில் சிக்கியுள்ளன. இது தொடா்பாக ஓமன் நாட்டு அரசிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நாமக்கல் கோழிப் பண்ணையாளா்களுக்கு உதவிட வேண்டும். தூதரக ரீதியில் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளாா்.