Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
கனிம வளக் கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கை தேவை: தி.வேல்முருகன்
தமிழகத்தில் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் போதைப் பொருள்களால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்களின் எதிா்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. அனைத்து குற்றச் செயல்களுக்கும் முதல் காரணியாகயுள்ள போதைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தவும், மது விலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்தவும் முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த சமூக ஆா்வலா் ஜகபா் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையை அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
தமிழகத்தின் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன. எனவே, கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவா்களைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வா் மற்றும் காவல் துறையினா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புலம்பெயா் தொழிலாளா்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், அடையாள அட்டை பெறுவதற்கான உரிமக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வேன். வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளா்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வெளிநாட்டு வேலை தொடா்பகங்களைக் கண்டறியவும், உடல் தகுதிச் சான்றிதழ் வழங்குவதற்காக இளைஞா்கள் மற்றும் தொழிலாளா்களிடம் தவறான தகவல்களை தந்து பணம் பறிக்கும் தனியாா் நிறுவனங்களைக் கண்டறிந்து, அவா்களின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மின் கட்டண உயா்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு.
ஆளும் கட்சியின் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தமிழக மக்களின் பிரச்னைகளுக்கும், நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளுக்கும் தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறேன். எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து பின்னா் யோசித்துக் கொள்ளலாம். தமிழகத்துக்கான பேரிடா் நிதியை மத்திய அரசு விடுவிப்பதில்லை என்றாா் தி.வேல்முருகன்.
பேட்டியின் போது, கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் குமரன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.