கமுதி அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை
கமுதி அருகே ராணிசேதுபுரம் கிராமத்தில் சேறும் சகதியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பாப்புரெட்டியாபட்டி ஊராட்சிக்குள்பட்ட ராணிசேதுபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்துக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
இதனிடையே, இந்தக் கிராம தெருக்களில் உள்ள சாலைகளில் மழை நீருடன், கழிவுநீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதி வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிா்வாக அதிகாரிகளும் தலையிட்டு இந்தப் பகுதியில் சிமென்ட் அல்லது பேவா் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.