Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்ல...
கரீபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவில் நில நடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு!
கேமன் தீவுகளின் ஜார்ஜ்டவுனுக்கு தென்மேற்கே 129 மைல் தொலைவில், நேற்று மாலை 6:23 மணிக்கு, 7.6 ரிக்டர் அளவிலான ஒரு வலுவான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் (USGS) தெரிவித்துள்ளது. கரீபியன் கடலின் நடுவில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம், ``அமெரிக்க நிலப்பகுதிக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றாலும், புவேர்ட்டோ ரிக்கோ, அமெரிக்க விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்படுகிறது.
அனைத்து தரவுகளின் அடிப்படையில், கடல் நீர் மட்டம் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கடற்கரைகள், துறைமுகங்கள், கடலோர நகரங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடும். எனவே, புவேர்ட்டோ ரிக்கோ, விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி அச்சுறுத்தல் உள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறது. கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரிக்கைக்குரியப் பகுதி அதிகாரிகள், சமூக ஊடகங்கள் மூலம் எச்சரிக்கை வெளியிட்டிருக்கின்றனர். மேலும், முன்னெச்சரிக்கையாக அடுத்த சில மணிநேரங்களுக்கு கடற்கரைகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
சர்வதேச சுனாமி தகவல் மையம் , "இந்த நிலநடுக்கத்தால் ஏற்படும் அபாயகரமான சுனாமி அலைகள் கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்ஸிகோ, ஹோண்டுராஸ், பஹாமாஸ், ஹைட்டி, டர்க்ஸ் மற்றும் கைகோஸ், சான் ஆண்ட்ரெஸ் பிராவிடன்ஸ், பெலிஸ், டொமினிகன் குடியரசு, கொலம்பியா, பனாமா, புவேர்ட்டோ ரிக்கோ, கோஸ்டாரிகா, அருபா, போனெய்ர், குராக்கோ, அமெரிக்க விர்ஜின் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் ஆகிய நாடுகளின் சில கடற்கரைகளில் ஏற்பட வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.