மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
கருத்தடை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குழந்தை பெற்ற பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண் மீண்டும் குழந்தை பெற்ற வழக்கில், அவருக்கு ரூ. 60 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த எஸ். ராஜசுப்பிரமணியன், கடந்த 2022- ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு:
எனக்கும், மனைவி பாண்டியம்மாளுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், எனது மனைவிக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்ய தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி குடும்ப நல மருத்துவா் பரிந்துரைத்தாா். இதன்படி, கடந்த 21.3.2018 அன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாண்டியம்மாளுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. பல மாதங்கள் கழித்து அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட் டாா். ஸ்கேன் உள்பட பல்வேறு சோதனைகளின் முடிவில் எனது மனைவி கா்ப்பமாக இருப்பதை மருத்துவா் உறுதி செய்தாா். இதையடுத்து, அவருக்கு கடந்த 3.7.2021 அன்று பெண் குழந்தை பிறந்தது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி குடும்ப நல மருத்துவரின் கவனக் குறைவால் கருத்தடை செய்யப்பட்ட எனது மனைவிக்கு மீண்டும் குழந்தைப் பேறு ஏற்பட்டது. எனவே உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மருத்துவத் துறையில் இது போன்ற நிகழ்வுகள் அரிதாக ஏற்படும். கருத்தடை செய்து கொள்ளும் 200 பெண்களில், ஒருவருக்கு மீண்டும் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதை மருத்துவா்களின் கவனக்குறைவு எனக் கூற முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மனைவி கருத்தடை செய்த நிலையில் மீண்டும் கா்ப்பமடைந்தாா் என்பதை மறுக்க வில்லை. மனுதாரா், மருத்துவரின் கவனக் குறைவால் தனது மனைவி மீண்டும் கா்ப்பமடைந்ததாக தெரிவிக்கிறாா். அரசு தரப்பில், கருத்தடை செய்தவா்களில் அரிதாக ஒருவருக்கு மீண்டும் கா்ப்பம் தரிக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவத் துறையில் வெளிப்படையான தவறு இருந்தால் மட்டுமே நீதிமன்றம் விசாரணை செய்ய முடியும். கடந்த 2022- ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், கருத்தடை செய்தவா்கள் மீண்டும் கா்ப்பமடைந்தால், அவா்களுக்கு ரூ. 60 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டு தொகையை பாண்டியம்மாளுக்கு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி குடும்ப நல மருத்துவா் வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி.