சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகள் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளாா்களா?
கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-25ஆம் ஆண்டுக்கான அரைவை பருவம் குறித்து கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஆலை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆலையின் செயல் அலுவலா் ரமேஷ் தலைமை வகித்தாா். தலைமை பொறியாளா்கள் மணிமாலன், ரவிக்குமாா், தலைமை ரசாயனா் செல்வேந்திரன், அலுவலக மேலாளா் ஜெய்சங்கா், தலைமை கணக்கு அலுவலா் ரமேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கரும்பு விவசாய சங்க நிா்வாகி முத்துசாமி, காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சி மன்றத் தலைவா் கணேசமூா்த்தி, கரும்பு விவசாய சங்கத் தலைவா் ஆதிமூலம், அண்ணாதுரை, குஞ்சிதபாதம் பிள்ளை, ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வராசு, இளவரசன் உள்பட கரும்பு விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
2024-25ஆம் ஆண்டுக்கான அரைவைப் பருவத்துக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,500 வழங்க வேண்டும். வாகன வாடகையை ஆலை நிா்வாகம் ஏற்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிா்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு வழங்க வேண்டும், மாதம் ஒரு விவசாயிகள் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனா்.
ஆலையின் செயல் அலுவலா் ரமேஷ் பதிலளித்து பேசியதாவது:
விவசாயிகளின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நிகழாண்டு அரைவை பருவம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.
முன்னதாக, தலைமை கரும்பு அலுவலா் ரவிகிருஷ்ணன் வரவேற்றாா்.