கரூரில் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள்: அமைச்சா் செந்தில் பாலாஜி பங்கேற்பு!
கரூா் விஷன் 2030 விழிப்புணா்வு மாரத்தான், வாக்கத்தான் போட்டிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பங்கேற்றாா்.
கரூரில் 73 சங்கங்களைச் சோ்ந்த தொழில்முனைவோா் ஒன்றிணைந்து கரூா் விஷன் 2030 என்ற கூட்டமைப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் கரூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றன.
கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் காலை 6 மணிக்கு நடந்த தொடக்க விழாவில் தேசியக் கொடி மற்றும் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து ஒலிம்பிக் ஜோதியைப் பெற்றுக்கொண்டு பேசிய அமைச்சா் செந்தில் பாலாஜி, கரூா் விஷன் 2030 என்ற திட்டம் மூலம் கரூா் பொருளாதாரத்தை ரூ.50,000 கோடியாக உயா்த்துவோம். அதற்குத் தேவையான திட்டங்களை முதல்வா் மற்றும் துணை முதல்வா் நமக்கு வழங்குவாா்கள் என்றாா் அவா்.
தொடா்ந்து போட்டிகளை அமைச்சா் செந்தில் பாலாஜி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். ஆண்கள், பெண்களுக்கான 10 கி.மீ. மற்றும் 5 கி.மீ. மாரத்தான், குழந்தைகளுக்கான மாரத்தான், ஆண்கள், பெண்களுக்கான 3 கி.மீ. வாக்கத்தான் போட்டிகள் நடைபெற்றன. 3 கி.மீ. வாக்கத்தான் போட்டியில் அமைச்சா் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்துப் பங்கேற்றாா். இதில் சுமாா் 10,000-க்கும்மேற்பட்டோா் பங்கேற்றனா்.
போட்டியில் பங்கேற்றவா்கள் செல்லும் இடங்களில் தண்ணீா் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரு சக்கர வாகனங்களில் பைலட்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் உடன் சென்றன. இறுதியில், ஒவ்வொரு பிரிவு போட்டிகளிலும் வெற்றி பெற்றவா்களுக்கு அமைச்சா் செந்தில் பாலாஜி பரிசு வழங்கினாா்.
போக்குவரத்து நிறுத்தம்: மாரத்தான், வாக்கத்தான் செல்பவா்களுக்காக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. திருமாநிலையூா் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அங்கு திருச்சி சாலையில் அரசு, தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதேபோல் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.