தென்காசி: சோலார் மின் ஆலை அமைக்க எதிர்ப்பு; ஆட்சியர் அலுவலகம் முன் 8 நபர்கள் தீக...
'கரூர் வழக்கில் விஜய்யை குற்றவாளி ஆக்குவதா? தவெகவை திமுக நசுக்க பார்க்கிறது' - அண்ணாமலை
பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரூர் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் நீதிபதியை விமர்சிப்பது துரதிஷ்டவசமானது. நீதிபதி குறித்து நாங்கள் எப்போதும் குறை சொல்ல மாட்டோம்.

தமிழகத்தில் மட்டும்தான் மத்திய அரசை எதிரியாக கருதுகிறார்கள். ஆரோக்கியமாக எந்த விஷயத்தையும் பேசாமல் அனைத்தையும் மத்திய அரசு மீது விமர்சிக்கின்றனர். ஒரு ஆளுநரை முதல்வர் தொடர்ந்து சீண்டி கொண்டிருப்பது சரியல்ல.
கரூர் வழக்கில் தவெக தலைவர் விஜய்யை முதல் குற்றவாளியாக இணைத்தால் வழக்கு நிற்காது. ஹைதராபாத் அல்லு அர்ஜுனா வழக்கில் அப்படித்தான் நடந்தது. தவெக மீது சில தவறுகள் இருக்கின்றன. அதற்காக விஜய்யை குற்றவாளியாக மாற்ற வேண்டும் என நினைத்தால் அது முடியாது.

அதற்கு வாய்ப்பே இல்லை. பாஜகவுக்கு தவெக மற்றும் விஜய்யை காப்பாற்ற வேண்டிய கடமை இல்லை. தவெகவை ஆளுங்கட்சி நசுக்க பார்க்கிறது. அதற்கு கருத்து சொல்கிறோம். அதற்காக அடைக்கலம் கொடுக்கிறோம் என்பது அபத்தமானது.
கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதை பொது இடங்களில் பேச முடியாது. கட்சியில் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். யாரும் தனிப்பட்ட முறையில் எதுவும் செய்ய மாட்டோம். 2026 தேர்தலில் வெற்றி வரவேண்டும் என்பதற்காக பணியாற்றி கொண்டிருக்கிறோம்.
நயினார் நாகேந்திரன் எப்போதும், யாருக்கும் எதிராக பேசவில்லை. எங்களுக்கு முக்கிய எதிரி திமுக. அதை எதிர்த்து மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார். அரசியலில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கிறது, அதை சரி செய்து கொண்டு செல்வோம்.” என்றார்.