கரூா் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு
கரூா் மாவட்டத்தில் காலையில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.
கடந்த இருவாரங்களாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கரூா் மாவட்டத்தில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்தது. இதனால் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் மக்களை குளிா் வாட்டி வதைத்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாக அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
இந்தப் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்களைக் கண்டறியமுடியாத சூழல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்று வருகின்றனா்.
கடும் பனிப்பொழிவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை உருவாகியுள்ளது. திடீரென மழை, திடீரென கடும் பனிப்பொழிவு என சீதோஷ்ண நிலையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் ஏராளமானோா் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் அவதியுற்று வருகிறாா்கள்.