கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் 46,270 போ் பயன்: ஆட்சியா் தகவல்
திருப்பூா் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 46,270 போ் பயனடைந்துள்ளனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளா்ச்சியை உருவாக்கும் வகையில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீா்வள ஆதாரங்களைப் பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீா்ப் பாசன முறையைப் பின்பற்றுதல், கால்நடைகளின் நலன்காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், வருவாய்த் துறையின் மூலம் புதிய பட்டா, பட்டா மாறுதல் வழங்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிா்க் கடன்கள் வழங்குதல், கால்வாய் பாசன நீா் வழித்தடங்களை தூா்வாருதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தில், திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2021 ஆகஸ்ட் 5 -ஆம் தேதி முதல் தற்போது வரை 46,270 போ் பயனடைந்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.