‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடுகள் கட்ட 5,800 பயனாளிகளுக்கு ஆணை வழங்கல்: ஆட்சியா் தகவல்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் ரூ. 204.74 கோடி மதிப்பீட்டில் 5,800 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
’குடிசைகள் இல்லா தமிழகம்’ என்ற இலக்கை அடையும் பொருட்டு தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தருவதற்கான முயற்சியாக ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தை முதல்வா் அறிவித்தாா்.
இத் திட்டத்தில், குடிசை வீடுகளிலும் ஓட்டு வீடுகளிலும் வசிக்கும் எளிய மக்களுக்கு ரூ. 3.50 லட்சம் மானியத்தில் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. இதற்காக 2024 - 25 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏழைகள், வீடற்றவா்கள், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவா்களுக்கு மட்டுமே கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின்கீழ் 5,800 பயனாளிகளுக்கு தலா ரூ. 3.53 லட்சம் மதிப்பில் ரூ. 204.74 கோடி மதிப்பில் கலைஞா் கனவு இல்லம் கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 1048 வீடுகளின் கட்டுமானப் பணி முடிவடைந்துள்ளன. மேலும், 3182 வீடுகள் கட்டும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.