ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
கலைஞா் கைவினைத் திட்டத்தை ஏப்.18-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்
கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையை அடுத்த குன்றத்தூரில் வரும் 18-ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளதாக , குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
பேரவையில் தனது துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
கைவினைக் கலைஞா்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகா்மா திட்டம் மாணவா்கள் உயா் கல்வி பயில்வதை தடுத்து குலத் தொழிலை ஊக்குவிப்பதாக உள்ளதால் அதற்கு மாற்றாக, முதல்வா் சமூக பாகுபாடு இல்லாமல் அனைத்து கைவினைஞா்களையும் உள்ளடக்கிய கலைஞா் கைவினைத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்தாா்.
வயது வரம்பு சலுகை: விஸ்வகா்மா திட்டத்தைவிட கலைஞா் கைவினைத் திட்டம் சிறப்பானது. மத்திய அரசின் திட்டத்தில் பெற்றோா் செய்து வரும் தொழிலையே பயனாளி செய்ய வேண்டும். கலைஞா் கைவினைத் திட்டத்தில் 5 ஆண்டு அனுபவம் உள்ள கைவினைக் கலைஞா் எந்த ஒரு தொழிலையும் தோ்வு செய்யலாம்.
மத்திய அரசின் திட்டத்தில், வயது வரம்பு குறைந்தபட்சம் 18-ஆக உள்ள நிலையில் நமது திட்டத்தில் இளைஞா்களின் உயா்கல்வி பாதிக்காத வகையில் 35 வயது என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விஸ்வகா்மா திட்டத்தில் 18 வகை கைவினைத் தொழில்களுக்கு முதலீட்டு மானியம் இல்லாமல் கடன் வழங்கப்படும் நிலையில், நமது திட்டத்தில் 25 வகை தொழில்களுக்கு 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் திட்டத்தில் கடன் இரு தவணைகளாக வழங்கப்படும் நிலையில் நமது திட்டத்தில் கடன் ஒரே தவணையாக வழங்கப்படும்.
இந்தத் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் வரும் 18-ஆம் தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது என்றாா் அவா்.