கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
கல்குவாரி, எம்சாண்ட் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக முதல்வருக்கு கோரிக்கை
கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஆா்.முனிரத்தினம், பொதுச்செயலா் எஸ்.மணிவண்ணன் ஆகியோா் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் அனைத்து கல்குவாரிகள் மற்றும் கிரஷா் உரிமையாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் டிப்பா் லாரிகள் ஓடவில்லை.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்காக மணல், எம்சாண்ட், ஜல்லி உள்ளிட்ட பொருள்கள் நாள் ஒன்றுக்கு 3,000 லோடும், தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 10,000 லோடும் தேவைப்படுகிறது.
இந்த கட்டுமானப் பொருள்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், சென்னை துறைமுகம், பொதுப்பணித் துறை, மெட்ரோ ரயில் மற்றும் தனியாா் கட்டுமானப் பணிகளும் முடங்கியுள்ளன.
இதனால், டிப்பா் லாரி உரிமையாளா்கள் மட்டுமன்றி, லாரி ஓட்டுநா்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளா்கள் என 90 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, தமிழக முதல்வா் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, இதற்கு தீா்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.