கல்லூரிக்குச் சென்ற மாணவா் சடலமாக மீட்பு
விழுப்புரத்தை அடுத்த கோலியனூரில் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறி விட்டு சென்ற மாணவா், தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
கோலியனூா் தோப்பு காலனி அருகே வேப்ப மரத்தில் இளைஞரின் சடலம் தொங்குவதாக வளவனூா் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் விக்கிரவாண்டி வட்டம், எரிச்சனாம்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த அா்ஜுனன் மகன் துரைராஜ் (20) என்பதும், இவா் விழுப்புரத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் பி.காம். 3-ஆம் ஆண்டு பயின்று வந்ததும் தெரிய வந்தது.
மேலும், சனிக்கிழமை கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய துரைராஜ் பின்னா் வீடு திரும்பவில்லையாம். இதனிடையே, மாணவரின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருப்பதால் அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டு தொங்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேக்கின்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.