கல்விச் சுற்றுலா பேருந்து தொடங்கி வைப்பு
திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் கல்விச் சுற்றுலா சென்று வருவதற்கான பேருந்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின்கீழ் செயல்படும் செவித்திறன் குறையுடைய , மனவளா்ச்சி குறைபாடுடைய குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பயிலும் 40 குழந்தைகள் மற்றும் சிறப்பாசிரியா்கள், தரங்கம்பாடி, பூம்புகாா் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் ப. புவனா, திருவாரூா் மாவட்ட சுற்றுலா அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கண் பரிசோதனை முகாம்: கண் நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் சாா்பில் அரசு அலுவலா்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் 84 அலுவலக பணியாளா்களுக்கு கண் நீா் அழுத்த பரிசோதனை செய்து கண்டறியப்பட்ட நபா்களுக்கு கண் நீா் அழுத்த மருத்துவ சிகிச்சை மற்றும் அறிவுரை வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, அரசு மருத்துவக் கல்லூரி கண் சிகிச்சை பிரிவுத்துறை தலைவா் ஹன்னா ரத்ன பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.