Sri Lanka: "கடன் நிலுவையை அடைத்துவிட்டோம்; ஆனாலும்..." - இலங்கை நிதி அமைச்சகம் ச...
கல்வியில் அரசியல் செய்யும் மாநில அரசு: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை
மாநில அரசு கல்வியில் அரசியல் செய்கிறது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜாபா் சாதிக் வழக்கில் இருந்து நீதிபதி விலகியதில் வேறு ஏதாவது அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளது. ஜாபா் சாதிக் ஆளுங்கட்சி சம்பந்தப்பட்ட நபா் என்பதால் அது தொடா்பாக விளக்கம் அளிக்க வேண்டும்.
கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊா்வலத்தில் காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்து வேடிக்கை பாா்க்கச் சொல்கின்றனா். பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம்தான். ஆனால், தீவிரவாதியைக் கொண்டாடுவதைத்தான் தவறு என்கிறோம்.
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும். தமிழகத்தில் தற்போது 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் இல்லாததால் மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.
உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பும், பல்கலைக்கழக மானியக் குழுவின் நடைமுறையும் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பது தொடா்பாக இருக்கையில், தமிழக அரசு தன்னிச்சையாக துணைவேந்தரை நியமிப்பதற்கு யாா் அதிகாரம் கொடுத்தது? கல்வியில் இவா்கள் அரசியல் செய்வதால்தான் ஆளுநா் அவா் கருத்தை சொல்கிறாா்.
தமிழக ஆளுநராக ஆா்.என்.ரவி வந்த பின்புதான் துணைவேந்தா் நியமனம் வெளிப்படையாக நடைபெறுகிறது. உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்தான் அரசியல் செய்கிறாா். அதனால் அமைச்சருக்கு ஆளுநா் பாடம் கற்பிக்கிறாா் என்றாா்.