கல்வியில் மட்டுமல்ல, விளையாட்டுத் துறையிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது: பொன்முடி
கல்வியில் மட்டுமல்ல, விளையாட்டுத் துறையிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
விழுப்புரம் காகுப்பத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, அவா் பேசியது:
பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டில் மட்டுமல்ல, கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும். மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் தேசிய அளவில் மட்டுமல்லாது, பன்னாட்டு அளவிலும் வெற்றி பெற்று, தமிழகத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும்.
தமிழகம் கல்வித்துறையில் மட்டுமல்ல, விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்கி வருகிறது. இதற்காக நாம் பெருமை கொள்ள வேண்டும். குறிப்பாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தமிழகம் விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.
விளையாட்டு வீரா்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா். விளையாட்டு வீரா்கள் உயா்கல்விப் பயில்வதற்கும், வேலைவாய்ப்புக்கும் இந்த இடஒதுக்கீடு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் பொன்முடி.
விழாவுக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 26 ஆம் தேதிமுதல் செப்டம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெற்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியா்கள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் என 5 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்க 31,399 போ் பதிவு செய்திருந்த நிலையில், சுமாா் 14 ஆயிரம் போ் போட்டிகளில் பங்கேற்றனா். மொத்தமாக 25 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுத் தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சுமாா் 633 போ் மாநிலஅளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனா். மாநில அளவிலான போட்டிகள் அக்டோபா் 2-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்றாா் ஆட்சியா்.
விழாவில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி முதல்வா் செந்தில்குமாா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஆழிவாசன், கால்பந்துப் பயிற்றுநா் கலையரசி, நகர திமுக பொறுப்பாளா் இரா.சக்கரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.