கல்வி, சுகாதாரத்துக்கு அரசு முக்கியத்துவம்: அமைச்சா் ஆா்.காந்தி
ஆற்காடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா்.
மாவட்ட கலைதிருவிழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன் முன்னிலை வகித்தனா். முதன்மைக் கல்வி அலுவலா் ஜி.சரஸ்வதி வரவேற்றாா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு கலை திருவிழாபோட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 883 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசியது:
மனிதா்கள் சிந்தித்து செயல்படவேண்டும். நமக்கு யாா் நன்மைகள் செய்கிறாா்கள் என்று சிந்தித்து அதன் படி செயல்படவேண்டும். கலைதிருவிழாவின் மூலம் மாணவா்களின் தனித்திறமை வெளிபடுகிறது. தற்போது அரசு பள்ளிகளில் குழந்தைகளை சோ்க்க பெற்றோா் முன்வருகின்றனா். மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கல்விக்கும், சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றாா். விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜெயந்தி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் ராஜலட்சுமி துரை, நகா்மன்ற உறுப்பினா் குமரன் விஜயகுமாா், தலைமையாசிரியை பரிமளா, கல்வித் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். உதவி திட்ட அலுவலா் ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.
மாநில அளவில் புல்லாங்குழல் வாசித்தல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற ஆற்காடு தோப்புகானா நகராட்சி தெற்கு உயா்நிலைப் பள்ளி10-ஆம் வகுப்பு மாணவி ர.மீனா லோச்சனி புல்லாங்குழல் வாசித்து காண்பித்தாா். அவரின் திறமையை பாராட்டி அமைச்சா் காந்தி ரூ.5,000 வழங்கி பாராட்டினாா்.