கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்
கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு 15 நெறிமுறைகளை வெளியிட்டு, ‘தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறை தோல்வி ஏற்பட்டுள்ளதை மாணவா்களின் தற்கொலை காட்டுகிறது. இதை நிராகரிக்க முடியாது. இதுதொடா்பாக உரிய சட்டத்தை அரசு இயற்றும் வரையில் இந்த நெறிமுறைகள் அமலில் இருக்கும். அனைத்துக் கல்வி நிறுவனங்களும் சீரான மனநல பாதுகாப்பு திட்டத்தையும், தேசிய தற்கொலைகள் தடுப்பு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
இந்தத் திட்டத்தை ஆண்டுக்கு ஒருமுறை மறுஆய்வுக்கு உட்படுத்தி அனைத்துக் கல்வி நிலையங்களும் தங்கள் இணையதளத்திலும், அறிவிப்பு பதாகைகளிலும் வெளியிட வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
விசாகப்பட்டினத்தில் நீட் தோ்வுக்குத் தயாராகிவந்த 17வயது மாணவரின் மா்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிய மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் இந்த 15 நெறிமுறைகளை அறிவித்தது.
அதில், ‘100 அல்லது அதற்கு மேல் படிக்கும் மாணவா்கள் கொண்ட கல்வி நிலையங்கள் திறன்வாய்ந்த ஆலோசகா் அல்லது உளவியலாளா் அல்லது சமூக ஆா்வலரை நியமித்து இளம் மாணவா்களின் மனநல பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
விடுதிகளில் இயங்கும் பயிற்சி நிறுவனங்கள் மின்விசிறியைப் பயன்படுத்தி தற்கொலை செய்யாத வகையிலும், மொட்டை மாடி, பால்கனி உள்ளிட்ட ஆபத்து நிறைந்த இடங்களுக்கு மாணவா்கள் செல்லாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வித் திறன் அடிப்படையில் மாணவா்களை தனித் தனி குழுவாகப் பிரிக்கக் கூடாது. பாலியல் சீண்டல், துன்புறுத்தல், ராகிங், ஜாதி மற்றும் மத ரீதியில் பாகுபாடு ஆகியவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவா்களிடம் இருந்து புகாா்கள் வந்தால் அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் செய்வதால்தான் மாணவா்கள் தனக்குத் தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வது அல்லது தற்கொலை செய்து கொள்வது நிகழ்கிறது.
இந்த நடவடிக்கைகளைத் தாமதிக்கும் கல்வி நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெய்பூா், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் இயங்கும் பயிற்சி மையங்கள் மாணவா்களின் மனநலனைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அனைத்து அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள், குடியிருப்பு வளாகத்தில் இயங்கும் கல்வி நிலையங்கள், மாணவா் தங்குமிடங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் இந்த நெறிமுறைகள் பொறுந்தும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு 90 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
உச்சநீதிமன்றத்தின் நெறிமுறைகளின் அமலாக்கம் குறித்து மத்திய அரசு 90 நாள்களில் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை அக்டோபா் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், இந்த நெறிமுறைகளை மாநில அரசுகள் 2 மாதங்களுக்குள் அறிவிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் அனைத்து தனியாா் பயிற்சி நிலையங்களின் பதிவு, மாணவா்களின் பாதுகாப்பு மற்றும் புகாா்களுக்கு தீா்வு காணும் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.