மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை: அமைச்சர்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விசாரணை CBI-க்கு மாற்றம்; மேல்முறையீடு கூடாது - மருத்துவர் ராமதாஸ்
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதில், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தால், ஆளும் திமுக அரசை நோக்கி பல்வேறு விமர்சனங்கள் எழவே, உடனடியாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கள்ளச்சாராயம் விற்றதாக சிலர் கைதும் செய்யப்பட்டனர். அதேசமயம், இதனை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிய வேளையில், சி.பி.சி.ஐ.டி இதில் விசாரணையில் ஈடுபட்டது. இவ்வாறிருக்க, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை இன்று சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை வரவேற்றிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், இது தமிழக அரசு நிர்வாகத்தின் தோல்விக்கு கிடைத்த சவுக்கடி என்று விமர்சித்து, இதில் மேல்முறையீடு செய்யக்கூடாது என வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், ``கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் நச்சு சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி பிறப்பித்த ஆணையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகவும் முக்கியமானவை. கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் கவனத்திற்கு வராமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கள்ளச்சாராய விற்பனையைத் தமிழக காவல்துறை கண்டும் காணாமலும் இருந்ததைத்தான் இது காட்டுகிறது. கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு திரும்பப் பெற்றது தவறு என்றெல்லாம் கண்டனக் கணைகளை நீதிபதிகள் தொடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திற்கு அருகிலும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திற்கு அருகிலும் கடந்த ஆண்டு நச்சு சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தமிழக அரசு உண்மையாகவே மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தால் அதன் பின்னர் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் கள்ளச்சாராயம் விற்காமல் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
இது தமிழக அரசின் படுதோல்வி ஆகும். அதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் தி.மு.க-வின் நிர்வாகிகளும், சட்டப்பேரவை உறுப்பினர்களும்தான் முழுக்க முழுக்க ஆதரவாக இருந்திருக்கின்றனர் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு ஆகும். இப்போது நீதிபதிகள் எழுப்பியுள்ள வினாக்கள் பா.ம.க.வின் குற்றச்சாட்டுகள் சரியானவை என்பதை உறுதி செய்திருக்கின்றன.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றையத் தீர்ப்பு கள்ளச்சாராய சாவுகளைத் தடுப்பதில் தமிழக அரசின் தோல்விக்கு கிடைத்த சவுக்கடி ஆகும். தமிழக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இருந்தால் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக் கூடாது. இவை அனைத்திற்கும் மேலாக தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக உருவெடுத்துள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்." என்று வலியுறுத்தியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...