கள்ளக்குறிச்சி: SC மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்த அரசு; விசிக கண்டனம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிதிவிமங்கலம் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களில் 137 பேருக்கு 2001-ம் (அதிமுக ஆட்சி) தலா 2 சென்ட் இடம் வழங்கப்பட்டது. அப்போது வெறும் ஒப்புகைச் சீட்டு மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பிறகு நீதிமன்ற உத்தரவால் பட்டாவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது எந்தவித முன்னறிவிப்புமின்றி அந்தப் பட்டாக்களை அரசு ரத்து செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம். அப்போது தெரியவந்ததாவது, 2001-ம் ஆண்டு அரசின் மூலம் இவர்களுக்கு இடம் பிரித்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால், இவருக்கு இந்த இடம்தான் என்று இடம் அளந்து விடப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் தங்களுக்கு இடம் அளந்து பட்டாவை பிரித்து தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கின்றனர்.

அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், சாலை மறியல் போன்ற பல்வேறு விதமான போராட்டங்களை மக்கள் நடத்தினர். பின்னர், உயர் நீதிமன்றம் 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் இடத்தை அளந்து பட்டா வழங்க உத்தரவிட்டது. பட்டா வழங்கிய பின்பு, பொருளாதாரத்தில் சற்று முன்னேறிய மக்கள் தங்களது இடத்தில வீடு கட்டி தற்போது வாழ்ந்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் இன்னும் அந்த இடத்தில வீடு கட்டாமல் வைத்திருக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில்தான் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இந்த மக்களின் பட்டாவை ரத்து செய்துள்ளார். கள்ளக்குறிச்சி தி.மு.க மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயனின் இடம் இந்த பகுதிக்கு எதிரே உள்ளதால், தலித் மக்கள் வாழும் பகுதிக்கு எதிரே இடம் இருந்தால் விலை போகாது என்று ஆளும் கட்சி இந்த இடத்தின் பட்டாக்களை ரத்து செய்து விட்டது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், கடந்த ஒரு மாதமாக இந்த ஊராட்சியில் நூற்றுக்ணணக்கான போலீஸார் இருந்த வண்ணமே உள்ளனர்.

இதில், பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு விதமான போராட்டங்களை கையிலெடுத்தும் தீர்வு கிடைக்காததால், வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனை நேரில் சந்தித்து தங்களுடைய கோரிக்கையை வைத்தனர். அதன் பின்னர் வி.சி.க கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் இரா.மதியழகன் தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி உட்பட தா.பாரிவேந்தன் போன்ற முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு அரசின் இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.