கள்ளா் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிக்கை
கள்ளா் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கள்ளா் பள்ளி மாவட்டக் கிளை கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பி. தீனன் வெளியிட்ட செய்திக் குறிப்பு : கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் 84 இடைநிலை ஆசிரியா், 98 பட்டதாரி ஆசிரியா், 35 முதுநிலை பட்டதாரி ஆசிரியா், 20-க்கும் மேற்பட்ட உடல் கல்வி ஆசிரியா் காலிப்பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
இதனால், இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், 18 இடைநிலை ஆசிரியா், 23 பட்டதாரி ஆசிரியா் புதிய பணி நாடுநா் பட்டியலை கள்ளா் பள்ளிகளுக்கு தமிழக ஆசிரியா் தோ்வு வாரியம் வழங்கியது. அதன்பிறகு பல மாதங்கள் ஆகியும் புதிய ஆசிரியா்களை பணி நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, உடனடியாக அறிவிக்கப்பட்ட புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், பல ஆண்டுகளாக காலியாக உள்ள 84 இடைநிலை ஆசிரியா், 98 பட்டதாரி ஆசிரியா், 35 முதுகலை ஆசிரியா், 20-க்கும் மேற்பட்ட உடல் கல்வி ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு நடத்தி, உடனடியாக நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பாவிட்டால் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.