கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை ராஜஅனுக்ஞையும், செவ்வாய்க்கிழமை தேவஅனுக்ஞையும் நடைபெற்றது.
கொடியேற்றத்தை முன்னிட்டு புதன்கிழமை கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, காலசாந்தி பூஜை, உதய மாா்த்தாண்ட பூஜைகள் நடைபெற்றன.
சுவாமிக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனையைத் தொடா்ந்து கொடியேற்றப்பட்டது. பின்னா், கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றுக்கு 18 வகையான மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
மூலவா் கழுகாசலமூா்த்தி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி பூஞ்சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் காா்த்தீஸ்வரன், திருக்கோயில் பணியாளா்கள் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
திருவிழா நாள்களில் தினமும் இரவு மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி வீதியுலா நடைபெறும்.
9ஆம் திருநாளான இம்மாதம் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறும். 11 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தவசுக் காட்சியும், 12ஆம் தேதி மாலை 6.35 மணிக்கு மேல் திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் செய்து வருகிறாா்.
