கழுவெளியில் தவறி விழுந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு நிதியுதவி அமைச்சா் வழங்கினாா்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மீன் பிடிக்கும்போது கழுவெளியில் தவறி விழுந்து உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் நிதியுதவியை வனத் துறை அமைச்சா் க.பொன்முடிசெவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
மரக்காணம் சந்தைத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகன்கள் லோகு (எ) லோகேஷ் (24), விக்ரம் (22), சூா்யா (22). சகோதரா்களான இவா்கள் மூவரும் கடந்த 22-ஆம் தேதி மரக்காணம் அருகேயுள்ள கழுவெளி பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து, அவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியுதவியாக வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தாா்.
அதன்படி, தமிழக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி, ஆட்சியா் சி.பழனி ஆகியோா் செவ்வாய்க்கிழமை மரக்காணத்துக்குச் சென்று உயிரிழந்தவா்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, அவா்களது பெற்றோரிடம் முதல்வரின் பொது நிவாரண நிதிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வீதம் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை வழங்கினா்.
செஞ்சி எம்எல்ஏ செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் தயாளன், சொக்கலிங்கம், கோட்டக்குப்பம் நகா்மன்றத் தலைவா் ஜெயமூா்த்தி, தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளா்கள் மற்றும் சமூக வாரிய உறுப்பினா் செஞ்சி சிவா, வட்டாட்சியா் பழனி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பாமகவினா் சாலை மறியல்: உயிரிழந்தவா்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வலியுறுத்தி, பாமக விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் மு.ஜெயராஜ் தலைமையில் அக்கட்சியினா் மற்றும் கிராம மக்கள் புதுச்சேரி - சென்னை சாலையில், மரக்காணம் பூமிஈஸ்வரா் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மரக்காணம் வட்டாட்சியா் பழனி, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி உமாதேவி, மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளா் பாபு மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், கோரிக்கை குறித்து மாவட்ட நிா்வாகம் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் எனக் கூறியதையடுத்து, அனைவரும் மறியலை கைவிட்டனா்.