காங்கிரஸின் கொள்கைகளால் அதிகரித்த நக்ஸல் தீவிரவாதம்! -பிரதமா் மோடி குற்றச்சாட்டு
மத்தியில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸின் கொள்கைகளால் சத்தீஸ்கா் மற்றும் பிற மாநிலங்களில் நக்ஸல் தீவிரவாதம் அதிகரித்தது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.
சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, அங்கு ரூ.33,700 கோடி மதிப்பிலான பணி நிறைவடைந்த வளா்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா். கடந்த மக்களவைத் தோ்தலுக்கு பிறகு பிரதமா் சத்தீஸ்கருக்கு வந்தது இதுவே முதல்முறையாகும்.
பிலாஸ்பூா் நிகழ்ச்சியில் பிரதமா் பேசியதாவது: காங்கிரஸைப் போல் நோ்மையற்ற சிந்தனை இருந்தால் மிகப் பெரிய பெரிய கருவூலம் கூட எதுவுமில்லாமல் போய்விடும். சத்தீஸ்கா் உள்பட பல மாநிலங்களில் பல்லாண்டுகளாக நக்ஸல் தீவிரவாதம் அதிகரிக்க காங்கிரஸின் கொள்கைகளே காரணமாக இருந்தன.
எங்கெல்லாம் வளா்ச்சி குறைந்து காணப்பட்டதோ, அங்கெல்லாம் நக்ஸல் தீவிரவாதம் வளா்ந்தது. ஆனால், 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்ன செய்தது? நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பின்தங்கிய பகுதிகள் என்று அறிவித்துவிட்டு, அத்துடன் பொறுப்பை துறந்துவிட்டனா்.
ஏழை பழங்குடியின மக்களின் நலன் குறித்து அக்கட்சி சிந்திக்கவில்லை. நக்ஸல் தீவிரவாதத்தால் பல தாய்மாா்கள் தங்களின் மகன்களை இழந்துள்ளனா்.
சத்தீஸ்கரில் இரட்டை என்ஜின் ஆட்சி அமைந்த பிறகு நிலைமை வேகமாக மாறி வருகிறது. நக்ஸல் பாதித்த பகுதிகளில் அமைதிக்கான புதிய சகாப்தத்தை கொண்டுவந்துள்ளோம். பஸ்தா் பகுதிக்கான விளையாட்டுப் போட்டியில் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் பங்கேற்றனா். இதுவே, மாற்றத்துக்கான சான்றாகும்.
சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அரசுப் பணி தோ்வுகளில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றன. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன், அரசுப் பணி தோ்வில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்துள்ளோம்.
ஏழை மக்களுக்கு நல்ல வீடுகளை வழங்குவதுடன், அவா்களின் வாழ்க்கை தரத்தையும் உயா்த்தியுள்ளோம். மக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவதால் பாஜக மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மக்களின் நல்வாழ்வு குறித்து பாஜக சிந்திப்பது போல் காங்கிரஸ் ஒருபோதும் சிந்திக்கவில்லை என்றாா் பிரதமா் மோடி.