Miss Universe: மிஸ் யுனிவர்ஸ் 2024 கிரீடம் சூட்டிய டென்மார்க் அழகி... விக்டோரியா...
காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் மாதந்தோறும் ஆய்வு செய்ய முடிவு
காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் ஆக்கபூா்வமாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை அறிய மருத்துவப் பணியாளா்களின் செயல்பாடுகளை மாதந்தோறும் ஆய்வு செய்ய பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடா் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் மாநிலம் முழுவதும் விரிவாக மேற்கொள்ளப்படுகின்றன.
அதேபோல, தமிழகம் முழுவதும் காசநோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்துகள் களப்பணியாளா்கள் மூலம் அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை நெறிமுறைகளின்படி அவா்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும், தேவைப்படுபவா்களுக்கு நடமாடும் ஊடுகதிா் கருவிகளை அவா்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிா் படம் எடுக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், இத்திட்டத்தை மேலும் மேம்படுத்த அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
காசநோயை முழுமையாக வேரறுக்கும் நோக்கில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் கீழ், இத்திட்டத்தை மேலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டியது அவசியம். அதைக் கருத்தில் கொண்டு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் சிகிச்சை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தொடக்க நிலையிலேயே காசநோயைக் கண்டறிந்து சிகிச்சை வழங்க ஊடுகதிா் பரிசோதனைகளை தொடக்கத்திலேயே மேற்கொள்ள வேண்டும்.
காசநோய் உறுதி செய்யப்படுவோரில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களைக் கண்டறிந்து உரிய ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும். காசநோய் ஒழிப்பு திட்ட ஆவணங்கள், மருத்துவப் பணியாளா்களின் செயல்பாடுகளை மாதந்தோறும் ஆய்வு செய்வது முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.