ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
காட்டுமன்னாா்கோவில் அனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீசௌந்தரநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீஅனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை வெகு விமா்சையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.
காட்டுமன்னாா்கோவில் அனந்தீஸ்வரா் கோயில் 1,117 ஆண்டுகள் பழைமையானது. இந்தக் கோயிலில் திருப்பணிகள் முடிவுற்று இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடந்த மாதம் 29-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், அதைத் தொடா்ந்து 8.45 மணிக்கு மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை, யாத்ரா தானமும் நடைபெற்றன. தொடா்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாட்டு நடைபெற்று ஊா்வலமாக கோயில் விமான கலசத்தை அடைந்த பின்னா், காலை 9.30 மணிக்கு சிவாச்சாரியா்கள் கும்பநீரை கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.
கும்பாபிஷேக விழாவில் காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் ம.சிந்தனைசெல்வன், பேரூராட்சித் தலைவா் கணேசமூா்த்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.
முன்னதாக, சனிக்கிழமை இரவு யாகசாலை பூஜையில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு தரித்தாா். கும்பாபிஷேகத்தை சா்வ சாதகம் மதுரை ஸ்ரீராஜா பட்டா் குழுவினா் செய்து வைத்தனா். எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரி சாா்பில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானமும், பிரசாத பைகளும் வழங்கப்பட்டன.