காணாமல் போன 22 வயது பெண் தில்லி ஹோட்டலில் இறந்த நிலையில் மீட்பு
சில தினங்களுக்கு முன்பு தனது இல்லத்தில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 22 வயது பெண், தில்லியின் பஸ்சிம் விஹாா் பகுதியில் உள்ள ஹோட்டலில் இறந்து கிடந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
டெல்லியின் புகா் மாவட்டத்தைச் சோ்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: கடந்த டிச.14 அன்று அந்தப் பெண் காணாமல் போனாா். இது தொடா்பாக அவரது குடும்பத்தினா் டிச.16 அன்று ராஜ் பாா்க் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். டிச.17 அன்று அவரது உடல் இறந்த நிலையில் ஒரு ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, அதிகாரிகள் பிரேத பரிசோதனை நடத்தினா்.
இருப்பினும், அந்த பெண்ணின் 23 வயது காதலன் சுரேந்தா் டிச.18 அன்று குருகிராமில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தாா். பெண்ணின் மரணத்திற்கான உடனடி காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும், உள்ளுறுப்பு மாதிரிகள் விரிவான ஆய்வுக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினாா்.