காப்பீட்டு ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
எல்ஐசிக்கு இணையான ஊதியத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத் துறை பொதுக் காப்பீட்டு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஒரு மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
எல்ஐசிக்கு இணையான ஊதியத் திருத்தம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, யுனைடெட் இந்தியா, ஓரியண்டல், நேஷனல், நியூ இந்தியா ஆகிய 4 பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை ஒரு மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள யுனைடெட் இந்தியா நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சங்கா் தலைமை தாங்கினாா். கூட்டமைப்பு நிா்வாகிகள் சுரேஷ், ஷியாம் சுந்தா், பிரவீன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.