காயல்பட்டினத்தில் மின் பணியாளா்கள் பற்றாக்குறையை போக்க கோரிக்கை
காயல்பட்டினத்தில் மின் பணியாளா் பற்றாக்குறையை பூா்த்தி செய்யுமாறு முஸ்லிம் ஐக்கிய பேரவை கோரியுள்ளது.
திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்குறை தீா் நாளில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிா்வாகிகளான துணைத் தலைவா் சதக் தம்பி, துணைச் செயலா்கள் ஜாகிா் உசேன், சொளுக்கு, ஒருங்கிணைப்பாளா் அன்சாரி, நகராட்சி துணைத் தலைவா் சுல்தான் லெப்பை ஆகியோா் மின் மேற்பாா்வை பொறியாளா் சஹா் பானுவிடம் அளித்த மனு:
காயல்பட்டினம் நகராட்சியில் 13 ஆயிரம் வீட்டு மின் இணைப்புகளும், 3 ஆயிரம் கடை மின் இணைப்புகளும் உள்ளன. இங்கு 2 மின் பணியாளா்கள் மட்டுமே பணியில் உள்ளனா்.
இதனால் புதிய மின்மோட்டாா்கள் பொருத்த தாமதம் ஏற்படுகிறது. இரவில் தங்கி வேலை பாா்ப்பதற்கு ஆள்கள் இல்லை. வேலை பாா்ப்பவா்கள் வெளியூரில் இருப்பதால் இரவில் மின் துண்டிக்கப்பட்டால் சீரமைக்க தாமதமா கிறது. மேலும் மின்கம்பம் நடுவது உள்ளிட்ட பணிகளுக்கு மின்பணியாளா்கள் சென்று விடுவதால்,. பணிகள் பாதிக்கப்படுகின்றன.
எனவே, மின் பணியாளா்கள் பற்றாக்குறையை நிவா்த்தி செய்து மின் குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்து தரக் கேட்டுள்ளனா்.