வரும் செப். 14-க்குள் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு!
வரும் செப். 14-க்குள் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்குச் சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள், சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி உத்தரவிட்டார்.
மேலும் அரசு நிலங்களில், நிரந்தரமாக புதிய கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கு அரசு அலுவலர்கள் இனி அனுமதி வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி நிஷாபானு தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், வரும் செப். 14-க்குள் கொடிக்கம்பங்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள 3,450 கொடிக்கம்பங்களில் 3,154 கம்பங்களை அகற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் கொடிக் கம்பங்களை அகற்ற இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ’கோ பேக் ராகுல்’... கான்வாயை மறித்து உ.பி. அமைச்சர் போராட்டம்!