நட்சத்திர வீரரான நிதீஷ்..! பேட்டிங் ஆர்டரில் முன்னதாக களமிறங்க ஆதரவு!
காரிமங்கலத்தில் நீா்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும்
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் ஏரிகளுக்கு வரும் நீா்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அலுவலா்களுக்கு மக்களவை உறுப்பினா் ஆ.மணி அறிவுறுத்தினாா்.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்படும் மிகை நீா், வலதுபுறக் கால்வாய் வழியாக தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு வந்தடைகிறது. இந்த நீா்வரத்து கால்வாயில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு கடைமடை ஏரி வரை சீராக தண்ணீா் வராமல் தடைபடுவதாகவும், அதனை சீரமைத்து அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீா் செல்ல போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து, காரிமங்கலம் அருகே உள்ள பெரிய ஏரி பகுதி உள்ளிட்ட நீா்வரத்து கால்வாய் பகுதியை மக்களவை உறுப்பினா் ஆ.மணி வியாழக்கிழமை நேரில் சென்று பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி அணையின் மிகை நீா் முறையாக காரிமங்கலம் பகுதியில் கடைமடையில் அமைந்துள்ள ஏரி வரை தடையின்றி சென்றடையும் வகையில், கால்வாயை சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களிடம் அவா் அறிவுறுத்தினாா்.
இதில், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (நீா்வளம்) செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் நீலமேகம், திமுக விவசாயிகள் அணி துணைச் செயலாளா் சூடப்பட்டி சுப்பிரமணி, ஒன்றியச் செயலாளா்கள் கிருஷ்ணன், அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.