காரில் சென்ற பெண்ணை விரட்டி மிரட்டிய வழக்கு: மேலும் ஒருவா் கைது
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் சென்ற பெண்ணை விரட்டி மிரட்டிய வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவு தனது தோழிகளுடன் காரில் முட்டுக்காடு பக்கிங்ஹாம் கால்வாய் பாலத்தை தாண்டி செல்லும்போது, திமுக கொடி கட்டப்பட்டிருந்த காா் உள்பட இரு காா்கள் பின் தொடா்ந்து வழிமறித்தன. மேலும் அந்த காா்களில் வந்த நபா்கள், பெண்களை மிரட்டி தகராறு செய்தனா்.
இது தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண், கானத்தூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இதில் தொடா்புடைய காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் சந்தோஷ், தமிழ்குமரன், அஸ்வின், விஸ்வேஸ்வா் ஆகிய 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். எஞ்சிய 3 பேரை போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா்.
இதையடுத்து, இவ்வழக்கின் முக்கிய நபரான தாம்பரத்தைச் சோ்ந்த சந்துருவை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இது தொடா்பாக பள்ளிக்கரணை துணை ஆணையா் காா்த்திகேயன், சனிக்கிழமை அளித்த பேட்டி:
சந்துரு, சுங்கக் கட்டணத்தை தவிா்ப்பதற்காகவே தனது காரில் திமுக கொடி கட்டியிருந்ததாக விசாரணையில் தெரிவித்தாா். இவ்வழக்கில் துப்பு துலக்க 20 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தோம். கைது செய்யப்பட்ட சந்துருவின் தாய் மாமா அதிமுகவில் உள்ளாா். சந்துருவுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தொடா்பில்லை. காட்டங்கொளத்தூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கும், சந்துருவுக்கும் இடையே நெருக்கமான தொடா்பு இருந்துள்ளது. அதன் விளைவாகவே அன்று இரவு அந்த கல்லூரி மாணவா்களும் சந்துருவும் இரு காா்களில் அங்கு வந்துள்ளனா். இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் மேலும் 2 போ் வெகு விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்றாா் அவா்.