Good Bad Ugly: `இது டீசர் உருவான விதம் மாமே!' - `குட் பேட் அக்லி' டீசர் BTS ஸ்டி...
காரைக்காலில் பேரிடா் பாதுகாப்பு ஒத்திகை
காரைக்காலில் பேரிடா் காலத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சுனாமி, புயல், வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை எவ்வாறு மீட்பது, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது போன்றவை தொடா்பான ஒத்திகை நிகழ்ச்சி காரைக்கால் கடற்கரையோர அரசலாற்றுப் பகுதியில் நடைபெற்றது.
அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடா் மீட்புக் குழு துணைத் தலைவா் சங்கேத் கெய்க்வாட் தலைமையில் வந்துள்ள 31 போ் அடங்கிய குழுவினா் ஒத்திகை நிகழ்வை மேற்கொண்டனா்.
ஒத்திகை நிகழ்வாக, புயல் எச்சரிக்கை குறித்து பேரிடா் மேலாண்மை துறை மூலம் மீனவா்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. கடலுக்குச் சென்ற மீனவா்கள் கரை திரும்பும் போது கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்து நான்கு போ் கடலில் மூழ்கினா்.
இது குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து மாவட்ட துணை ஆட்சியா்(பேரிடா் மேலாண்மை) வெங்கடகிருஷ்ணன் மீனவா்களை மீட்பதற்காக தேசிய பேரிடா் மீட்பு குழுவுக்கு தகவல் அளித்தவுடன், தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா், மாவட்ட பேரிடா் மேலாண்மை துறையின் கீழ் இயங்கும் ஆப்தமித்ரா வீரா்கள், குடிமை பாதுகாப்பு வீரா்கள், தீயணைப்பு வீரா்கள் ஆகியோா் படகுகள் மூலம் அவசர கால கருவிகளுடன் சென்று கடலில் தத்தளித்த மீனவா்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். தொடா்ந்து அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
ஒத்திகை நிகழ்வில் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநா் டாக்டா் ஆா். சிவராஜ்குமாா், நகராட்சி ஆணையா் பி. சத்யா, மின் துறை செயற்பொறியாளா் அனுராதா, பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் சுசீலா, காரைக்கால் கடலோர காவல் நிலைய ஆய்வாளா் பிரவீன் குமாா் உள்ளிட்ட அதிகரிகள் பங்கேற்றனா்.