காரைக்காலில் ரோந்துப்படகு மூலம் கண்காணிப்பு தொடக்கம்: எஸ்எஸ்பி ஆய்வு
காரைக்கால் கடல் பகுதியில் ரோந்துப் படகு மூலம் கண்காணிப்பை போலீஸாா் மேற்கொள்ளத் தொடங்கினா்.
காரைக்கால் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுவந்த 5 டன் திறனுள்ள அதிவேக ரோந்துப் படகு பழுதாகி பல ஆண்டுகளாக முடக்கப்பட்டது. காரைக்கால் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா முயற்சியால் புதுவை காவல்துறை தலைமை ரூ. 12.33 லட்சம் நிதி ஒதுக்கி, கேரள மாநிலத்திலிருந்து வல்லுா்கள் வந்து பழுதுநீக்கி தயாா்படுத்தினா். இப்படகை புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் காணொலி வாயிலாக புதன்கிழமை இயக்கிவைத்தாா்.
இதைத்தொடா்ந்து கடலோரக் காவல் நிலையத்தினா் இப்படகை கடலில் இயக்கிச் சென்றனா். முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா படகில் பயணித்தாா். காரைக்கால் துறைமுகம் வரை படகை இயக்கிச் சென்றனா். மண்டல காவல் கண்காணிப்பாளா் முருகையன், காவல் ஆய்வாளா்கள் பிரவீன்குமாா், லெனின்பாரதி, மா்த்தினி உள்ளிட்டோா் அதில் இடம்பெற்றிருந்தனா்.
காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் கூறுகையில், ரோந்துப் படகு முழு வீச்சில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். தினமும் கண்காணிப்பு மேற்கொள்வதோடு, ஆபத்து காலங்களில் விரைவாக செயல்படவும் கடலோரக் காவல்படையினா் தயாராக உள்ளனா் என்றாா்.
இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தல் நடப்பதை தடுக்க வேண்டியுள்ளதால், ரோந்துப் பணி மேற்கொள்ள இப்படகு அவசியமாகியுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.