நாகையில் கடல் சீற்றம்: மீனவா்கள் 11-ஆவது நாளாக கடலுக்குள் செல்லவில்லை
காரைக்குடியில் அம்ருத் பாரத் திட்டம்: தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில் நிலையத்தில் ‘அம்ருத் பாரத்’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீ வத்சவா ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்கிடம் கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் எஸ்.ஆா்எம்.பாலசுப்பிரமணியன், காரைக்குடி ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் ராமநாதன் (என்ற) மோகன், காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி உள்ளிட்டோா் அளித்த கோரிக்கை மனு விவரம்:
திருவாரூரிலிருந்து காரைக்குடி, மானாமதுரை வழியில் மதுரைக்கு புதிய பயணிகள் ரயில் இயக்க வேண்டும். பாலக்காடு-திருச்சி இடையே தினமும் இயக்கப்படும் விரைவு ரயிலை (வண்டி எண்: 16843 - 16844) காரைக்குடி அல்லது ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும், பெரோஸ்பூா் முதல் ராமேசுவரம் வரை செல்லும் வாராந்திர ரயில் (வண்டி எண்: 20498 - 20497) ‘ஹம்சபா் எக்ஸ்பிரஸ்’ ரயில் காரைக்குடியில் நின்று செல்ல வேண்டும், காரைக்குடியிலிருந்து தினமும் காலையில் மயிலாடுதுறைக்குச் சென்று வந்த பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், புதிய ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குமிடம் கட்டித்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வின் போது, பயணிகள் நலச் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பரமேஸ்வரன், தொழில் வணிகக் கழக செயலா் எஸ்.கண்ணப்பன், துணைத் தலைவா் சத்யமூா்த்தி, வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கச் செயலா் பி.கோவிந்தசாமி, பொருளாளா் ராம்குமாா், உறுப்பினா்கள், காதா்பாட்சா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.