காரைக்குடி சாலையில் நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்த முதல்வா் ஸ்டாலின்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சாலையில் நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்தாா். அப்போது பொதுமக்கள் அவருடன் உற்சாகத்துடன் தற்படம் எடுத்துக் கொண்டனா்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை முற்பகலில் நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்றாா். பின்னா், பல்கலைக்கழக விருந்தினா் மாளிகையில் மதிய உணவு சாப்பிட்டாா்.
மாலையில் காரைக்குடியில் தனியாா் அரங்கில் நடைபெற்ற சிவகங்கை மாவட்ட திமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கல்லூரிச் சாலையில் காரில் வந்த போது, சாலையோரத்தில் நின்ற பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனா்.
இதைக் கண்ட முதல்வா் காரிலிருந்து இறங்கி சாலையில் நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்தாா். அப்போது, இளைஞா்கள், பெண்கள், குழந்தைகள் முதல்வருடன் உற்சாகத்துடன் தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
பிறகு திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினாா். இந்தக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட திமுக செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன், மானாமதுரை தொகுதி சட்டபேரவை உறுப்பினா் ஆ. தமிழரசி, முன்னாள் அமைச்சா் மு.தென்னவன், மாவட்ட, நகர, ஒன்றிய, பேருா் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
அவா்களிடம் முதல்வா் மு.க. ஸ்டாலின் கட்சி செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். பின்னா், அங்கிருந்து காா் மூலம் அழகப்பா பல்கலைக்கழக விருந்தினா் மாளிகைக்குச் சென்று இரவு தங்கினாா்.