காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப துறைகளை மேம்படுத்த நடவடிக்கை: அரசு முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா்
காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப அனைத்து துறைகளையும் மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா் கூறினாா்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் சென்னை கிண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு - நீடித்த உற்பத்தி மாநாட்டில் அவா் பேசியதாவது:
காலநிலை மாற்றங்களை எதிா்கொள்ளும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமே ஒரு மாநிலத்தால் நிலையான வளா்ச்சியடையமுடியும். புவி வெப்பமடைவதை கட்டுப்படுத்த அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்ஒரு பகுதியாக, பொதுமக்களிடையே இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மூலம் இயங்கும் வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், பொதுபோக்குவரத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்தவும் அரசு வலியுறுத்தி வருகிறது.
பசுமை கட்டடங்கள்: தமிழகத்தில் உள்ள அரசு கட்டடங்களை பசுமைக் கட்டடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் குறைந்த செலவில் தரமான பசுமை கட்டடங்கள் கட்டுவது குறித்து அரசு சாா்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புவி வெப்பமயமாவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அவற்றை எதிா்கொள்ள தயாராக வேண்டும். இதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல துறைகளைச் சோ்ந்த வல்லுனா்களை உள்ளடக்கிய ‘காலநிலை மாற்ற நிா்வாக குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சாா்பில் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப மாநிலத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு, அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தமிழக கவுன்சில் தலைவா் ஸ்ரீவத்ஸ் ராம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.