மாற்று இடத்தில் திரெளபதி அம்மன் கோயில் கட்ட தானம்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு
காவலர்களுக்கான வார விடுமுறை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
சென்னை: காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் சில வேளைகளில் வார விடுமுறை அளிக்க முடியாமல் போய்விடுகிறது. அது உண்மைதான் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில், காவல் துறை மானியக் கோரிக்கையின் போது பேரவை உறுப்பினர் ம. சிந்தனை செல்வன் பேசியதற்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் குறுக்கிட்டு அளித்த பதிலில்,
பேரவை உறுப்பினர் ம.சிந்தனை செல்வன் அவர்கள், இங்கு உரையாற்றுகிறபோது காவலர்கள் விடுமுறையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரை 4,48,983 நாள்கள் வார விடுமுறையும், SSI மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறை வீதம் 67,233 நாள்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமான சட்டம்-ஒழுங்குப் பராமரிப்புப் பணிகள் உள்ள காலங்களில் மட்டும், தவிர்க்க இயலாத காரணங்களினால், சில வேளைகளில் வார விடுமுறை அளிக்க முடியாமல் போய்விடுகிறது என்று அவரே குறிப்பிட்டுச் சொன்னார். அது உண்மைதான். மற்றபடி வழக்கமான காலங்களில் வார விடுமுறை நடைமுறையிலிருந்து வருகிறது.
அதேபோன்று, உறுப்பினர் ஊதிய முரண்பாடு பற்றியும் குறிப்பிட்டுச் சொன்னார். அதைப் பொறுத்தவரையில், காவல் துறையில் காவல் ஆளிநர்களாகப் பணியமர்த்தப்பட்டு, பதவி உயர்வு மற்றும் பல்வேறு நிலைகளில் காவல் ஆளிநர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகள், ஊதியக் குழு அறிமுகத்தால் வரும் ஊதிய முரண்பாடுகள் தவிர்த்து, தொடர்பான கருத்துருக்கள் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டு அரசின் பரிசீலனையில் இருக்கிறது.
அதேபோன்று, காவலர்கள் பணி உயர்வு பற்றியும் குறிப்பிட்டுச் சொன்னார். இதுதொடர்பாக, அந்தந்த காவலர்கள் பணியாற்றும் அந்தந்த மாவட்டம், மாநகரத்திலுள்ள காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆணையர்கள்தான் முடிவெடுக்க விதிகளில் இடம் உள்ளது. எனவே, மாநில அளவில் ஒரே வகையான State Seniority அடிப்படையிலே பதவி உயர்வு வழங்குவதற்கு தற்போதைய விதிகளில் இடம் இல்லாத நிலை நிலவுகிறது என்பதை உறுப்பினருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.