காஸா போர்: 43,799 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்!
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே கடந்த 13 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் காஸாவில் இதுவரை 43,799 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் ஆளும் காஸா பகுதியின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே கடந்த 13 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் தெற்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் தொடங்கியது. இந்தத் தாக்குதலில், இஸ்ரேல் மக்கள் 1,206 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம், ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாகக் கூறி இஸ்ரேல் வடக்கு காஸா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 13 மாதங்களில் 43,799 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,03,601 பேர் காயமடைந்ததாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹமாஸ் அமைப்பினர் ஆளும் காஸா பகுதியின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | ஆப்கனில் ஆற்றில் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி
காஸாவின் அருகாமையிலுள்ள ஜபாலியா மற்றும் பெய்ட் லாஹியா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்த இருப்பதாக இன்று அறிவிப்பு வெளியிட்டனர்.
மேலும், ரஃபா பகுதியில் நடத்திய தாக்குதல்களில் ஏராளமான பயங்கரவாதிகளை ஒழித்து, பயங்கரவாத உள்கட்டமைப்பு தளங்களை தகர்த்து, ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியதாக இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.