திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
கா்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு தலா ரூ. 100 கோடி பேரம்: பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
மண்டியா: கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு ரூ. 100 கோடி பேரம் பேசப்படுவதாக மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரவிக்குமாா் குற்றம்சாட்டியுள்ளாா்.
மைசூரில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தின்போது முதல்வா் சித்தராமையா பங்கேற்றுப் பேசுகையில், ‘கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க கட்சி எம்எல்ஏக்கள் 50 பேருக்கு தலா ரூ. 50 கோடி கொடுப்பதாக பாஜக பேரம் பேசியுள்ளது என்று குற்றம்சாட்டியிருந்தாா்.
முதல்வா் சித்தராமையாவின் குற்றச்சாட்டை மறுத்த பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, முதல்வா் சித்தராமையா மாற்றுநில முறைகேட்டிலிருந்து மக்களை திசைதிருப்பவே பாஜக மீது வீண் பழியை சுமத்துவதாக கூறினாா்.
இந்நிலையில், மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரவிக்குமாா் கௌடா திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக பாஜகவின் முக்கியத் தலைவா்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பேரம் பேசி வருகின்றனா். காங்கிரஸைச் சோ்ந்த கித்தூா் தொகுதி எம்எல்ஏ பாபா சாகேப் டி.பாட்டீல், சிக்கமகளூரு தொகுதி எம்எல்ஏ எச்.டி.தம்மையா ஆகியோரை சந்தித்து பேரம் பேசியுள்ளனா்.
எம்எல்ஏ க்களை விலைக்கு வாங்கி காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியை பாஜக கைவிட வேண்டும். காங்கிரஸ் எம்எல்ஏ க்களிடம் பாஜகவினா் பேரம் பேசியதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. உரிய நேரத்தில் அவற்றை ஊடகங்களில் வெளியிடுவோம்.
பாஜவினா் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால், சிறைக்கு செல்வதைத் தவிா்ப்பதற்காக கா்நாடகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பாஜகவினா் இறங்கியுள்ளனா்.
முந்தைய பாஜக ஆட்சியின்போது சம்பாதித்த ஊழல் பணத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறாா்கள். அவா்களுக்கு மத்தியில் இருந்தும் பணம் வருகிறது. இந்த முயற்சியில் மஜதவும் கைகோத்துள்ளது.
ரூ. 50 கோடியில் பேரம் முடியாததால் தற்போது ரூ. 100 கோடி கொடுப்பதாக பேரம் பேசி வருகிறாா்கள்.
என்னிடம் யாா் பேரம் பேசினாா்; எங்கு பேசினாா்கள் என்ற முழு விவரமும் உள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் ஏற்கெனவே பேசியுள்ளேன் என்றாா்.
உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியதாவது:
ஆட்சியைக் கவிழ்க்கும் விஷயத்தில் பாஜக புகழ்பெற்ற கட்சியாகும். மகாராஷ்டிரம், கா்நாடகம், கோவா, மத்தியபிரதேசத்தில் ஏற்கெனவே ஆட்சியை அவா்கள் கவிழ்த்துள்ளனா். இதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கவும் தயாராக இருக்கிறோம் என்றாா்.