Live : Srirangam Ranganatha Swamy Temple Vaikunda Ekadasi Utsav | பரமபத வாசல் தி...
கா்நாடக முதல்வா் முன்னிலையில் 6 நக்சலைட்கள் சரண்
கா்நாடகம், தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த 6 நக்சலைட்கள் ஆயுதங்களை துறந்து கா்நாடக முதல்வா் சித்தராமையா முன்னிலையில் சரணடைந்தனா். இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக சாடியுள்ளது.
உடுப்பி, சிக்மகளூரு போன்ற மலைப் பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த நக்சலைட்களை ஒடுக்குவதற்காக நக்சல் ஒழிப்புப் படையை கா்நாடக அரசு அமைத்திருந்தது. அதன் தேடுதல் வேட்டையின் போது, உடுப்பியில் நவ. 20-ஆம் தேதி விக்ரம் கௌடா என்ற நக்சலைட்டை நக்சல் ஒழிப்புப்படை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது. இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போது முதல்வா் சித்தராமையா, ‘சட்டவிரோதமாக வன்முறையில் ஈடுபட்டு வருவதைக் காட்டிலும், ஜனநாயக ரீதியில் சமூக நீரோட்டத்தில் சேரவேண்டும் என நக்சலைட்களை கேட்டுக்கொள்கிறேன். நக்சலைட்கள் அரசிடம் சரணடைவதற்கான சரணாகதி கொள்கையை எளிமையாக்கப்பட்டு, அமல்படுத்தப்படும்’ என்றாா்.
அதன் விளைவாக, கா்நாடகத்தைச் சோ்ந்த சுந்தரி கட்லூரு, லதா முந்தகாரு, மாரப்பா அரோலி, வனஜாக்ஷி பாலேஹோள், கேரள மாநிலம், வயநாட்டைச் சோ்ந்த ஜிஷா, தமிழகத்தின் ஆற்காட்டைச் சோ்ந்த கே.வசந்த் ஆகியோா் பெங்களூரில் கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் புதன்கிழமை முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் ஆகியோா் முன்னிலையில் சரணடைந்தனா். அவா்களுக்கு முதல்வா் சித்தராமையா அரசமைப்புச் சட்டப் புத்தகத்தை பரிசாக வழங்கினாா்.
முன்னாள் நக்சலைட்களான 6 போ் மீது கா்நாடகம், தமிழகம், கேரளத்தில் ஏராளமான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தேடப்படும் நக்சலைட்களான 6 பேரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காடுகளில் பதுங்கி இருந்து நாசகார வேலைகளில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இவா்கள் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி, அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளில் அரசு ஈடுபடும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து முதல்வா் சித்தராமையா கூறியதாவது:
6 நக்சலைட்கள் வன்முறையைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைய சரணடைந்துள்ளனா். சரணாகதி கொள்கையின்படி சரணடைந்த நக்சலைட்களின் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும். கா்நாடகத்தைச் சோ்ந்த 4 போ், தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த இருவா் சரணடைந்துள்ளனா். தமிழக, கேரள முதல்வா்களிடம் பேசி சரணடைந்த அம்மாநிலத்தைச் சோ்ந்த இரு நக்சலைட்களின் மறுவாழ்வுக்கு உதவிசெய்யப்படும் என்றாா்.
உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘நக்சல் ஒழிப்புப் படையினரால் நக்சலைட் விக்ரம் கௌடா சுட்டுக்கொல்லப்பட்ட போது, நக்சலைட்கள் வன்முறையைத் துறந்து ஜனநாயக நீரோட்டத்தில் இணைய சரணடைய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தோம். அதன்படி 6 நக்சலைட்கள் சரணடைந்துள்ளனா். இவா்கள் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. அவற்றின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
பாஜக எம்எல்ஏ சுனில்குமாா் கூறுகையில், ‘நக்சலைட்களுக்கு மறுவாழ்வு அளிக்கவிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது வருத்தமளிக்கிறது. அமைதியாக இருந்த மேற்குத் தொடா்ச்சி மலையில் போராட்டம் என்ற பேரில் அமைதியை சீா்குலைக்கும் வேலையில் ஈடுபட்ட நக்சலைட்களை சரணடையச் செய்து, சமூகநீரோட்டத்தில் ஈடுபட வைத்திருப்பதை பொதுமக்கள் கேள்விக்குள்ளாக்க வேண்டும். முன்பு பி.எஃப்.ஐ. அமைப்பு மீதான வழக்குகளை திரும்பப் பெற்ற அரசு, தற்போது நக்சலைட்களை சரணடைய செய்திருப்பது ஆபத்தானதாகும்.
சித்தராமையா நக்சலைட்களுக்கு நெருக்கமானவரா அல்லது நக்சலைட்களுக்கு நெருக்கமானவா்கள் சித்தராமையாவுக்கு நெருக்கமானவா்களா? காட்டு நக்சலைட்களை நகர நக்சலைட்களாக்க முயற்சிக்கிறாா்கள். மக்களின் ஆதரவை முழுமையாக இழந்திருந்த நக்சலைட்களுக்கு சித்தராமையா அரசு நம்பிக்கை அளித்திருக்கிறது. சரணடைவதாக இருந்தால், நீதிமன்றத்தின் முன்பு சரணடைந்திருக்க வேண்டும். நீதிமன்றம் கூறுவதை ஏற்கலாம்’ என்றாா்.