பிக்பாஸ் பிரபலம் மகாராஷ்டிர தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி!
கிண்டி: அரசு மருத்துவரை கத்தியால் குத்தியது ஏன்? - கைதான இன்ஜினீயர்; விசாரணையில் வெளிவந்த தகவல்
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் பாலாஜி ஜெகநாதன் (55). இவர் இன்று காலை (13.11.2024) பணியிலிருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு சர்வசாதாரணமாக நடந்து சென்றார். அவரை மடக்கிப் பிடித்த மருத்துவமனையின் செக்யூரிட்டிகள், கிண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அரசு டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு மருத்துவர்கள் சங்கங்கள் தெரிவித்தன. இந்தநிலையில் டாக்டரை கத்தியால் குத்திய சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் டாக்டரை கத்தியால் குத்தியதற்கான காரணத்தை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்குப்பிறகு விக்கேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து கிண்டி போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்டுள்ள விக்னேஷ், டிப்ளமோ இன்ஜினீயரிங் படித்துள்ளார். 26 வயதாகும் இவரின் அம்மா பிரேமாவுக்கு (51) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த 2023 மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிண்டி அரசு மருத்துவமனையில் பிரேமா, டாக்டர் பாலாஜி ஜெகநாதனிடம் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனாலும் பிரேமாவுக்கு உடல் நலம் சரியாகவில்லை. அதனால் டாக்டர் பாலாஜி ஜெகநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விக்னேஷ், தன்னுடைய அம்மா பிரேமாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு பிரேமாவின் மெடிக்கல் ஹிஸ்ட்ரியை பார்த்த சில டாக்டர்கள், உன்னுடைய அம்மாவுக்கு அளித்த சிகிச்சை காரணமாக side effect ஏற்பட்டுள்ளது. அதற்காக சம்பந்தப்பட்ட டாக்டர் மீது வழக்கு தொடர முடியும் என ஆலோசனை கூறியதாக தெரிகிறது.
அதனால் விக்னேஷிக்கு டாக்டர் பாலாஜி ஜெகநாதன் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் மருத்துவமனைக்குச் சென்று டாக்டர் பாலாஜி ஜெகநாதனிடம் அம்மாவின் உடல் நலம் குறித்து சரியாக ஏன் சொல்லவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். தினமும் அம்மாவின் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதை பார்க்க முடியாத விக்னேஷ், அம்மாவின் இந்த நிலைமைக்கு காரணமான டாக்டரை சும்மா விடக் கூடாது என கருதியுள்ளார். இதையடுத்து இன்று காய்கறி வெட்டும் கத்தியோடு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார் விக்னேஷ். நோயாளியைப் போல டாக்டர் பாலாஜி ஜெகநாதனைச் சந்தித்த விக்னேஷ், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியிருக்கிறார்.
அதனால் நிலை குலைந்த டாக்டர், கீழே சரிந்து விழுந்திருக்கிறார். பின்னர் கூட்டம் அதிகளவில் அங்கு கூடியதும் கத்தியை தூக்கி எரிந்து விட்டு அங்கிருந்து சர்வசாதாரணமாக நடந்துச் சென்றிருக்கிறார் விக்னேஷ். அப்போது அவரை மருத்துவமனை செக்யூரிட்டிகள் மடக்கிப்பிடித்து எங்களிடம் ஒப்படைத்தனர். தற்போது சிகிச்சையிலிருக்கும் மருத்துவரிடமும் என்ன நடந்தது என்று விசாரித்து வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த வழக்கில் விக்னேஷை கைது செய்து விசாரித்துவருகிறோம்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...