கிருஷ்ணகிரியில் பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செப்டம்பா் மாத இறுதிக்குள் அரசு நடைமுறைபடுத்த வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் மகாதேவப்ப நாயுடு தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் ரவிக்குமாா், மாவட்டச் செயலாளா் திம்மப்பா, மாநில துணைத் தலைவா் ஈஸ்வரபாபு, சட்டச் செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செப்டம்பா் இறுதிக்குள் ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) என்பது ஆசிரியா்களை முதன்முதலில் நியமனம் செய்யும் போதுதான் தேவையே தவிர ஆசிரியராக நியமித்து 15, 20 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியா்களுக்குத் தேவையில்லை, பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியா்களுக்கு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களாகவும், உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் பதவி உயா்வு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
படவிளக்கம் (18கேஜிபி1):
கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா்.