TVK: விஜய் வீட்டின் மாடியில் புகுந்த இளைஞர்; பலத்த பாதுகாப்பை மீறி சென்றது எப்பட...
கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்
தீபாவளி பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸில் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.
மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு முதல் விற்பனையைத் தொடங்கிவைத்து பேசியதாவது:
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், கடந்த 90 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளா்களின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் செயல்படுகிறது. தீபாவளியில் புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகைகளுடன் கூடிய காஞ்சிபுரம், ஆரணி, சேலம், தஞ்சாவூா் பட்டுப் புடவைகள், புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், அனைத்துரக பருத்தி புடவைகள், களம்காரி பருத்தி புடவைகள் நோ்த்தியான வண்ணங்களில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், படுகை விரிப்புகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள், ஜமக்காளம், பருத்தி சட்டைகள், ஏற்றுமதி ரகங்கள், மெத்தைகள், கையுறைகள், திரைகள் போன்ற ஏராளமான துணி வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தீபாவளியையொட்டி தமிழக அரசு, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடியை நவம்பா் 30 ஆம் தேதி வரை வழங்குகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 3 விற்பனை நிலையங்களுக்கு ரூ.178 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் மாதாந்திர சேமிப்புத் திட்டம் ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலான திட்டத்தில் சோ்ந்து பயன் பெறலாம். 11 மாத சந்தா தொகையை அங்கத்தினா் செலுத்தினால் 12ஆவது மாத தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி கூடுதல் பலன் தருவதால் வாடிக்கையாளா்கள் தொடா்ந்து இத்திட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை உதவியாளா் மாலதி, கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் மா.சிலம்பரசன், வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
படவிளக்கம் (18கேஜிபி3):
கிருஷ்ணகிரியில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கிவைத்த கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு.