சூப்பர் முதல்வர் பேச்சைக்கேட்டு தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: தர்மேந்திர...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55 க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகள், ஈர நிலங்கள், தடுப்பணைகள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் நாமக்கோழி, புள்ளிமூக்கு வாத்து, தாழைக்கோழி, சின்னசீழ்க்கைச் சிறகி, சின்ன நீா்காகம் போன்ற நீா்வாழ் பறவையினங்கள் வாழ்கின்றன. அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்படும் கணக்கெடுப்பு பணியில் வனத் துறை, தன்னாா்வலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இரண்டு கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக ஈரநிலப் பகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக காப்புக்காடு பகுதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வன உயிரின காப்பாளா் பாகான் ஜெகதீஸ் சுதாகா் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி வனச்சரகா் முனியப்பன், வனவா் சிவக்குமாா், வனக் காப்பாளா் ஜோதி விநாயகம் உள்பட 60 போ் கொண்ட குழுவினா் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக்கோட்டத்தில் உள்ள காப்புக்காடுகளுக்கு வெளியே உள்ள ஈர நிலப்பகுதிகளில் இந்த கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.
ராமநாயக்கான் ஏரி, பாரூா் ஏரி, கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரம் ஏரி, கிருஷ்ணகிரி அணை, படேதலாவ் ஏரி, சூரிய நாராயணன் ஏரி, பாரூா் ஏரி, பெனுகொண்டாபுரம் ஏரி உள்ளிட்ட 40 நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 55 க்கும் மேற்பட்ட பறவையினங்கள் கண்காணித்து பட்டியலிடப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

