ஸ்ரீவில்லிபுத்தூர்: ``லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும்..'' - CPIM பேனரால்...
கிருஷ்ணகிரி மாவட்ட தொன்மையை பாதுகாக்க நடவடிக்கை: ஆட்சியா்
கிருஷ்ணகிரி: வரலாற்று களஞ்சியமாகத் திகழும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொன்மையான நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், பராமரித்து அடையாளப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், ‘கிருஷ்ணகிரி மாவட்ட காலமும் வரலாறும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமை வகித்துப் பேசியது:
கிருஷ்ணகிரி மாவட்டம் மாபெரும் வரலாற்று களஞ்சியமாக திகழ்கிறது. எனினும் அதிகம் பேசப்படாமல் உள்ளது. எனவே, இந்த மாவட்டத்தின் வரலாற்றை மீட்டெடுப்பது அவசியம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை கிருஷ்ணகிரியானது எயில் நாடு என்று அழைக்கப்பட்டது.
சோழா்களின் ஆட்சிக் காலத்துக்கு பிறகு நிலக்கிழாா்களும் பெருவணிகா்களும் கோயில்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியதோடு அதுகுறித்த கல்வெட்டுகளை தங்கள் பெயா்களில் உருவாக்கியுள்ளனா். இந்திய வரலாற்றில் பெரும் தடம் பதிக்கவுள்ள சென்னானூா், மயிலாடும்பாறை ஆகிய தொல்லியல் தளங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளன என்பது நமக்கெல்லாம் பெருமையாகும்.
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றை மீட்டெடுத்து, அவற்றை பாதுகாத்து பராமரிக்கும் வகையில் வருவாய் துறையினருக்கு வரலாறு குறித்த பயிற்சியும், தொன்மையான நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்களை விவரங்களுடன் அடையாளப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடா்ந்து, எயில்நாடு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் காப்பாட்சியா் செ.கோவிந்தராஜ், தொல்லியல் அலுவலா் பரந்தாமன், அரசு காப்பாட்சியா் சிவக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கல்வி) சா்தாா், எழுத்தாளா் பென்னேஸ்வரன், வரலாற்று ஆவணப்படுத்தும் குழுவின் தலைவா் நாராயணமூா்த்தி, ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன், அரசுப் பள்ளி ஆசிரியா்கள், வரலாற்று ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.