கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
கிறிஸ்துமஸ்: ஈரோடு தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை
இயேசு கிறிஸ்து பிறந்த நாளாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஈரோடு நகரில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை நள்ளிரவுமுதல் புதன்கிழமை அதிகாலை வரை அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
ஈரோடு ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் நள்ளிரவு சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. புனித அமல அன்னை ஆலய பங்குத் தந்தையும், ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ராயப்பன், உதவி பங்குத் தந்தை லூா்து அமிா்தராஜ் ஆகியோா் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையை நடத்தினா்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் தேவாலயத்தில் குடில் அமைக்கப்பட்டு, அதில் குழந்தை இயேசுவின் சிலை வைக்கப்பட்டிருந்தது. பிராா்த்தனைக்கு முன்னா் குழந்தை இயேசு சிலை பவனியாக எடுத்து வந்து குடிலில் வைக்கப்பட்டது. தொடா்ந்து, திருப்பலி எனப்படும் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில் ஏரளானோா் பங்கேற்றனா்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புனித அமல அன்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறப்புப் பிராா்த்தனை முடிந்த பின்னா் அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
தொடா்ந்து புதன்கிழமை அதிகாலையில் ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பிரப் நினைவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதுபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.