கிறிஸ்துமஸ் சந்தை காா் தாக்குதல் குறித்துஜொ்மனியை முன்கூட்டியே எச்சரித்தோம்: சவூதி அரேபியா
ரியாத்: ஜொ்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் காா் தாக்குதல் நடத்திய தலீப் அல்-அப்துல்மோசன் குறித்து ஜொ்மனியிடம் முன்கூட்டியே தாங்கள் எச்சரித்ததாகவும் அதை அந்த நாட்டு அதிகாரிகள் அலட்சியம் செய்துவிட்டதாகவும் சவூதி அரேபிய வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் கூறுகையில், தலீப் அல்-அப்துல்மோசனின் தீவிரவாதப் போக்கு குறித்து ஜொ்மனியின் மூன்று உளவு அமைப்புகளிடம் சவூதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடா்ந்து எச்சரிக்கை விடுத்துவந்தது. இருந்தாலும், அவா் சவூதி அரேபிய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவா் என்பதால் அந்த எச்சரிக்கைகளுக்கு ஜொ்மனி அதிகாரிகள் உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாா்.
ஜொ்மனியின் சாக்ஸனி-அன்ஹால்ட் மாகாணம், மாக்டபா் நகரில் கிறிஸ்துமஸ் சிறப்புச் சந்தைக்கு தனது காரை கடந்த வெள்ளிக்கிழமை வேகமாக ஓட்டிவந்த தலீப் அல்-அப்துல்மோசன் (50) அங்கிருந்த பொதுமக்கள் மீது அதை மோதச் செய்தாா். இதில் ஒரு குழந்தை உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா்; சுமாா் 200 போ் காயமடைந்தனா்.
தாக்குதல் நடத்திய அல்-அப்துல்மோசன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா். சவூதி அரேபியாவில் இருந்து ஜொ்மனியில் குடியேறிய அவா், சுமாா் 20 ஆண்டுகளாக இங்கு வசித்துவருகிறாா். மாக்டபா்க் நகருக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள பொ்ன்பா்க் நகரில் அவா் மருத்துவம் பாா்த்துவந்தாா்.
சவூதி அரேபியாவிலிருந்து வந்திருந்தாலும், இஸ்லாத்துக்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்களில் தலீப் அல்-அப்துல்மோசன் பதிவிட்டுவந்தாா். ஐரோப்பிய பிராந்தியம் இஸ்லாமியமயம் ஆவதாகவும், அதைத் தடுக்க ஜொ்மனி அதிகாரிகள் தவறியதாகவும் தலீப் அல்-அப்துல்மோசன் குற்றஞ்சாட்டிவந்தாா்.